உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கோலாகல தொடக்கம். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 14 April 2026

உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கோலாகல தொடக்கம்.

 


கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா, இவ்வாண்டும் மிகுந்த பக்தி உற்சாகத்துடன் இன்று மாலை கொடியேற்றம் மற்றும் சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.


திருநங்கைகள் பெருமளவில் கலந்து கொண்டு கொண்டாடும் இத்திருவிழா, தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து பக்தர்களை ஈர்க்கும் சிறப்புடையது. விழாவின் தொடக்க நிகழ்வாக நடைபெற்ற சாகை வார்த்தல் நிகழ்ச்சியில், சுற்றுவட்டார ஏழு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளிலிருந்து கூழ் மற்றும் கஞ்சிக் குடங்களை எடுத்துக்கொண்டு மேளதாள முழக்கத்துடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.


பின்னர், கோவில் அருகிலுள்ள அம்மன் கோவிலில் மாவிளக்கு ஏற்றி, படையல் வைத்து, பக்தர்களுக்கு கூழ் மற்றும் கஞ்சி வழங்கி வழிபாடு செய்தனர். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்தில் ஈடுபட்டனர்.


மொத்தம் 18 நாட்கள் நடைபெறும் இந்த சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான சாமி திருக்கண் திறந்தல் மற்றும் திருநங்கைகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி வருகிற 28ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து 29ஆம் தேதி திருத்தேரோட்டம் விமர்சையாக நடைபெறும்.


இவ்விழாவின் நிறைவு நிகழ்வாக அடுத்த மாதம் 1ஆம் தேதி தர்ம பட்டாபிஷேகம் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


ஆண்டுதோறும் நடைபெறும் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா, சமத்துவம் மற்றும் ஆன்மிக ஒற்றுமையை எடுத்துக்காட்டும் தனித்துவமான திருவிழாவாகக் கருதப்படுகிறது. இவ்வாண்டும் பக்தர்களின் திரளான பங்கேற்புடன் விழா சிறப்பாக தொடங்கியுள்ளது.


D.செல்வம்

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் 

தமிழக குரல்.

No comments:

Post a Comment

Post Top Ad